தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி
தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி அளிக்கப்பட்டனர்.
கரூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தன. நேற்றுமுதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தியேட்டர்கள் செயல்பட தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்றுமுதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன. அந்தவகையில் கரூரில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் தீபாவளியையொட்டி துணி, இனிப்புகள், வெடிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் கடந்த வாரத்தில் புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் தீபாவளிக்கு புதுப்படங்கள் வெளிவர இருப்பதால், தீபாவளி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.