3,767 பேர் புதிய வாக்காளர்களாக சேர்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் 3,767 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் 3,767 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சவுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை) பிரபாகரன், (தேவகோட்டை), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, நகர கழக செயலாளர் துரை ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் ரமேஷ், சேதுபதி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், விஜயகுமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி, பா.ஜ.க. நகர் தலைவர் தனசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முத்துராமலிங்கபூபதி, உலகநாதன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதன்படி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 6 லட்சத்து 5 ஆயிரத்து 231 பெண்களும், 5 லட்சத்து 84 ஆயிரத்து 66 ஆண்களும் மற்றவர்கள் 60 பேரும் சேர்த்து 11 லட்சத்து 89 ஆயிரத்து 294 பேர் உள்ளனர்.
சட்டசபை வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
காரைக்குடி தொகுதி
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 115 ஆண்களும், 1 லட்சத்து 61 ஆயிரத்து 783 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 945 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 346 ஆகும்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 99 ஆண்களும், 1 லட்சத்து 49 ஆயிரத்து 218 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 10 பேர் என சேர்த்து 2 லட்சத்து 92 ஆயிரத்து 327 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 334 ஆகும்.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 802 ஆண்களும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 56 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 3 லட்சத்து 860 பேர் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 351 ஆகும்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 990 ஆண்களும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 174 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 1 என சேர்த்து 2 லட்சத்து 78 ஆயிரத்து 165 மொத்த வாக்காளர்கள். மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 323 ஆகும்.
3,767 பேர் புதிதாக சேர்ப்பு
தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர்களை விட 3 ஆயிரத்து 767 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த பெயர்களில் இருந்து 1,585 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவகங்கை மாவட்டத்தில் 1,348 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கூடுதலாக 6 வாக்குச்சாவடி மையங்கள் சேர்க்கப்பட்டு 1,354 வாக்குசாவடிகள் உள்ளன.