டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்

ரூ.7 லட்சம் மதுபாட்டில்கள் இருப்பு குறைந்ததால் டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Update: 2021-11-01 17:44 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.31,680 மற்றும் சட்டவிரோதமாக தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் உத்தரவின்பேரில் உட்தணிக்கை பிரிவு அதிகாரிகள் விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள 2 கடைகளிலும் சோதனையிட்டனர். இதில் கடை எண் 11406-ல் ரூ.4,70,660 மதிப்பிலான மதுபாட்டில்களும், 11472 கடையில் ரூ.2,29,485 மதிப்பிலான மதுபாட்டில்களும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடையின் மேற்பார்வையாளர்களான பார்த்தசாரதி, அய்யப்பன், விற்பனையாளர்கள் முருகன், ராமஜெயம், சிவக்குமார் ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்