பா.ம.க.வினர் சாலை மறியல்; 132 பேர் கைது

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-01 17:37 GMT
விழுப்புரம், 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து நேற்று மதுரை உயர்  நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பா.ம.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி கண்டன உரையாற்றினார். இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாவட்ட இளைஞர் சங்க அமைப்பு செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ஸ்டாலின், எழிலரசன், சந்தோஷ், குழந்தைவேல், நகர தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்தும், உடனடியாக இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.

திண்டிவனம்

திண்டிவனம் காந்தியார் திடலில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு இந்த வழக்கின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் சமூகநீதிப் பேரவை மாநில செயலாளர் வக்கீல் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி, மாநில துணைத்தலைவர் மரவாடி ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராஜ், செந்தில், சவுந்தர், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், சலவாதி சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர். 

செஞ்சி-வல்லம் 

செஞ்சி கூட்டு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைமை ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கனல் பெருமாள், மாநில வழக்கறிஞர் அணி கலியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கோபால், ஒன்றிய செயலாளர் முருகன், தொகுதி அமைப்பாளர் ரகுபதி, முன்னாள் நகர செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 24 பேரையும் கைது செய்தனர். இதேபோல் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாவட்ட பா.ம.க. செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், விஷ்ணு உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மரக்காணத்தில் ஒன்றிய செயலாளர் குமரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.  

ஆர்ப்பாட்டம்

மேலும் கூட்டேரிப்பட்டில் மாநிலக்குழு உறுப்பினர் செங்கேணி தலைமையிலும், ஒலக்கூரில் மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் மாநில துணை செயலாளர் தர்மன் தலைமையிலும், கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்