பொள்ளாச்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பொள்ளாச்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் 2021-ன்படி பெயர், சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி 2022 ஜனவரி 1-ந் தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.
மேலும் பெயர் நீக்கம், திருத்த ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது நேர்முக உதவியாளர் தணிகவேல் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 599 பேரும், பெண்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேரும், மற்றவை 42 பேரும், மத்திய அரசின் பாதுகாப்பு படையில் பணிபுரிவோர் 44 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை தொகுதியில் ஆண்கள் 97 ஆயிரத்து 659 பேரும், பெண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 60 பேரும், மற்றவை 20 பேரும், மத்திய அரசின் பாதுகாப்பு படையில் பணிபுரிவோர் 50 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 789 பேர் உள்ளனர்.
இறுதி பட்டியல்
வருகிற 30-ந் தேதி வாக்காளர் பட்டியலில் உள்ள ஆட்சேபனை கள் குறித்து தெரிவிக்கலாம். இதையடுத்து அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் தேர்தல் பிரிவு அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சுருக்க முறை திருத்தத்தை கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வருகிற ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொள்ளாச்சி தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும், வால்பாறையில் 235 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
பழுதான வாக்குச்சாவடிகள் குறித்து தெரியப் படுத்தலாம். மேலும் வாக்குச்சாவடி தூரத்தில் இருந்தால், அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வார்டு மறு வரையறை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.