மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 157 மனுக்கள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 157 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2021-11-01 16:30 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்து தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

 தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு முதல் திருமண சான்று வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏழைகளிடம் லட்சக்கணக்கில் பணத்தை கடனாக பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மோசடி நபர், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஒருவரிடம் வேலை பார்ப்பதாக கூறி எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். 

எனவே சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். 

நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 157 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்