தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-01 16:16 GMT
புகார் பெட்டி செய்தி எதிரொலி;
மின்விளக்கு சீரமைக்கப்பட்டது 

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து அம்பாநகர் வரை சாலையில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என்று கடையத்தை சேர்ந்த திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சீரமைத்து எரிய வைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

வேகத்தடை வேண்டும்

நெல்லை மாவட்டம் முக்கூடல்-கடையம் சாலையில் அரிராம்நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் செல்கிறார்கள். ஆனால், இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மணி, ரஸ்தாவூர். 

சேறும், சகதியுமான சாலை

நெல்லை டவுன் வழுக்கோடையில் இருந்து ஆர்ச் வரை செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையால் இந்த சாலை மிகவும் மோசமாக சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லுபவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். முக்கிய சாலையான இதை உடனடியாக சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆஷிக், டவுன்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் கிராமம் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலும், முறையான கால்வாய் வசதி இல்லாமலும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சீரமைக்க வேண்டுகிறேன்.
பிரதீப், தென்காசி.

பழுதடைந்த நூலகம் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அருகில் உள்ள நூலகம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள அரசமரம் வளர்ந்து கட்டிடத்தை சுற்றி உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகிறார்கள். ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த நூலகத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், திருச்செந்தூர்.

தெருவிளக்கு எரியுமா?

தூத்துக்குடி 49-வது வார்டு முருகன் கோவில் தெருவில் உள்ள மின்விளக்குகளில் ஒன்று மட்டும் கடந்த பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகள் இந்த தெரு விளக்கை எரியவைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
முருகேசன், தூத்துக்குடி.

குப்பையால் நோய் பரவும் அபாயம்

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் குப்பையாக காட்சி அளிக்கிறது. தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்து உள்ளதால் மாணவ-மாணவிகள் பலர் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி தங்களது ஊர்களுக்கு செல்கிறார்கள். ஆனால், பஸ் நிறுத்தம் பகுதி குப்பையாக உள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஸ்ரீராம், உடன்குடி.

மரக்கிளை வெட்டப்படுமா? 

ஆழ்வார்திருநகரி வாய்க்காங்கரை தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் அருகே உள்ள புங்கை மரத்தின் கிளைகள் மின்கம்பி, மின்கம்பத்தை ஒட்டியவாறு செல்கிறது. இதனால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த மரத்தின் கிளைகளை வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுடலை, ஆழ்வார்திருநகரி 

மேலும் செய்திகள்