சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
திருப்பூர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. போக்குவரத்து மாற்றம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது. நேற்று மாலை முதல் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளிமாவட்டங்களுக்கு 80 பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமைகாலை முதல் முழு வீச்சில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 5ந் தேதி வரை பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுபோல் போக்குவரத்து மாற்றமும் இன்று காலை முதல் அமல்படுத்தப்படுகிறது.
தற்காலிக பஸ் நிலையம்
கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஈரோடு, சேலம் மாவட்ட பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூரூ, சத்தியமங்கலம், புளியம்பட்டி, பண்ணாரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் குமார் நகரில் உள்ள பழைய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
ஊத்துக்குளி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் கோர்ட்டு ரோடு வழியாக குமரன் ரோட்டுக்கு செல்லக்கூடாது. குமரன் ரோட்டில் இருந்து ஊத்துக்குளி ரோட்டுக்கு வாகனங்கள் செல்லலாம். ஒருவழிப்பாதையாக கோர்ட்டு ரோடு இன்று முதல் செயல்படுகிறது.
இருசக்கர வாகனங்கள்
அதுபோல் குமரன் ரோட்டில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று பார்க் ரோட்டில் இருந்து நஞ்சப்பா பள்ளி ரோடு வழியாக மீண்டும் குமரன் ரோட்டுக்கு கார்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. டவுன்ஹால் வளைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மட்டுமே குமரன் ரோட்டில் செல்ல அனுமதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் ரெயில் நிலையம் சென்று திரும்பி குமரன் ரோடு செல்ல அனுமதிக்கப்பட்டது.
-