தேனியில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
தேனியில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
தேனி:
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. ஓய்வில்லாமல் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், 1,002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும், சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட தணிக்கையாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தாமரைக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.