கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை

கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-01 13:24 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் முன்னாள் ராணுவவீரர் தூக்கு போட்டு தற்கொலை ெசய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்
கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பசுங்கிளி மகன் செண்பகராஜ் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ராணுவத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், திரும்ப பணிக்கு செல்லவில்லை. ஊரிலேயே தங்கிய அவர் கூலி வேலை செய்து வந்தார். பெற்றோர் வீட்டுக்கு அருகிலேயே இவர் மனைவி குழந்ைதகளுடன் மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வேலைக்கு சென்றவர் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்தார்.
தூக்கு போட்டு தற்கொலை
 சாப்பிட்டு விட்டு வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்றவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது மனைவி முத்துமாரி மாமனார் வீட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து செண்பகராஜின் தந்தை பசுங்கிளி மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு செண்பகராஜ் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செண்பகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்