நெல்லிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
குடிமங்கலம் பகுதியில் நெல்லிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் நெல்லிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மரப் பயிர் சாகுபடி
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தென்னை தவிர அதிகளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்கள் பலன் தரக்கூடிய மரப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவது நல்ல மாற்றமாக கருதப்படுகிறது. ஒரு சில விவசாயிகள் நெல்லிக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
நெல்லியை பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும் இதனை கருத்தில் கொண்டு வெவ்வேறு ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் எல்லா பருவத்திலும் வருவாய் ஈட்டமுடியும். நெல்லியை பொறுத்தவரை நடவு செய்த 4 மாதங்களில் பூக்கத்தொடங்கி விடுகிறது. ஆனால் 3 வருடங்கள் வரை இந்த பூக்களை உதிர்த்துவிட வேண்டும் அப்போதுதான் நல்ல மகசூல் கிடைப்பதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும். நெல்லிக்காய் மரங்கள் 40 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது. ஊடுபயிராக வாழை மற்றும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெற முடியும். பொதுமக்களிடையே நல்ல பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது எனவே சத்துக்கள் அதிகம் கொண்ட பெருநெல்லிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மலைநெல்லி
இப்போது அதிக அளவில் வீரிய ஒட்டு ரக நெல்லிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் மலைப்பகுதிகளில் இயற்கையாக வளரும் மலைநெல்லி எனப்படும் பெருநெல்லியில் இன்னும் கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை வனப்பகுதியிலேயே பெருமளவு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மலை நெல்லியை அழியாமல் பாதுகாக்கவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறை இணைந்து மலை நெல்லி நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி அவற்றை பராமரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். மேலும் புவி வெப்பமயமாதல், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மரம் வளர்ப்பு கட்டாயமானதாக உள்ளது. இதில் மரப்பயிர்கள் சாகுபடி என்பது தொழில் ரீதியான மரம் வளர்ப்பாக உள்ளதால் இரட்டை பயன் தருவதாக உள்ளது. எனவே மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் மா, பலா, நெல்லி, சப்போட்டா, மலைவேம்பு போன்ற மரப்பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அரசு திட்டங்களை அறிவிக்க வேண்டும் மேலும் இந்த விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.