தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்

Update: 2021-11-01 11:04 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில், 14 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இடம்பெற்று உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்-2022 நடக்கிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ரவி, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் சந்தனம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், பா.ஜனதா தெற்கு மாவட்ட செயலாளர் மான்சிங், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 382 வாக்காளர்களும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 934 வாக்காளர்களும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 589 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 445 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 190 வாக்காளர்களும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 888 வாக்காளர்களும் உள்ளனர். 
மாவட்டத்தில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 339 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 58 ஆயிரத்து 946 பெண் வாக்காளர்கள், 143 திருநங்கைகள் என மொத்தம் 14 லட்சத்து 84 ஆயிரத்து 428 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு 30.11.21 வரை விண்ணப்ப படிவங்கள் அளிக்கலாம். மேலும், 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை), 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் விண்ணப்பப்படிவங்களை கொடுத்து பயன்பெறலாம். வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் மொத்தம் 1,611 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வெளியிட்டார். இதனை அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தாசில்தார் ஜஸ்டின், தேர்தல்
பிரிவு துணை தாசில்தார் பிரபாகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் சங்கர நாராயணன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் அமுதா, விளாத்திகுளம் துணை தாசில்தார் வசந்த மல்லிகா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 888 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 938 பேரும், பெண்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 922 பேரும், மற்றவர்கள் 28 பேரும் அடங்குவர். விளாத்திகுளம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 309 பேரும்,  பெண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 65 பேரும், மற்றவர்கள் 8 பேரும் அடங்குவர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 826 ஆண்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 335 பெண்கள், மற்றவர்கள் 29 பேர் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 190 வாக்காளர்கள் உள்ளனர். 
திருச்செந்தூர்
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், திருச்செந்தூர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் கோகிலா வெளியிட்டார். இதில், திருச்செந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 137 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்கள், 19 பிற வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 589 வாக்காளர்கள் உள்ளனர். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், தேர்தல் துணை தாசில்தார் ஜெய்கிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்