மீஞ்சூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவி சாவு
மீஞ்சூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சல்
மீஞ்சூர் அடுத்த அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் ஊராட்சியில் அடங்கிய சோமஞ்சேரி காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராணி (30). இவர்களுக்கு வினோதினி (8) என்ற மகள் உள்ளார்.
சோமஞ்சேரி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வினோதினிக்கு தொடர்ந்து காய்ச்சல், வாந்தி இருந்து வந்தது. இதையடுத்து அவர் பொன்னேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் தொடர்ந்து இருந்து வந்ததால் உடல் நிலை மேலும் மோசமானது.
சாவு
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வினோதினியின் தம்பி டேனியல் (6), அவரது தந்தை வினோத், தாயார் ராணி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சோமஞ்சேரி காலனியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் பொன்னேரி, ஸ்டான்லி, எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதியில் பலருக்கும் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், ஆர்.டி.ஓ. செல்வம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்பட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ஆய்வு செய்தனர்.
மருத்துவ முகாம்
பின்னர் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் காய்ச்சல் குறித்து மருத்துவ குழுவினர் முகாம் நடத்தியும், 30-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை கொண்டு தெருக்கள் மற்றும் வீடுகளில் நேரில் சென்று மருந்து மாத்திரை வழங்கியும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
சுகாதார பணியினை பார்வையிட்ட பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், ஆர்.டி.ஓ. செல்வம் ஆகியோர் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மேலும் 5 நாட்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை வழங்க வேண்டும் என மருத்துவ அலுவலரிடம் கேட்டு் கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இருந்தனர். சுகாதாரப்பணிகள் குறித்து மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பொதுமக்களை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.