ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்த மழை- ஜவுளி வாங்க வந்த மக்கள் அவதி
ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக ஜவுளி வாங்க வந்த மக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக ஜவுளி வாங்க வந்த மக்கள் அவதி அடைந்தனர்.
மழை
தீபாவளி பண்டிகை 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் ஜவுளி மற்றும் பட்டாசு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேசாக மழை பெய்துவிட்டு நின்றது. இதனால் எதிர்பார்த்த கூட்டம் காணப்படவில்லை. பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி ஜவுளிகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே கடை வீதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாலை 4 மணிஅளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு சிறிது நேரம் மழை பெய்யாமல் இயல்பாக காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
சாலையோர வியாபாரிகள்
இந்தநிலையில் மீண்டும் 10 நிமிடங்கள் நல்ல மழை பெய்தது. இதையடுத்து சாரல் மட்டுமே அடித்தது. இதேபோல் இரவு வரை மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் கடைவீதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு வரை மழையின் தாக்கம் இருந்து கொண்டே இருந்ததால், சிறிது நேரம் மழைக்கு ஒதுங்கியவர்களும் மீண்டும் மழையில் நனைந்து கொண்டு சென்றார்கள்.
குறிப்பாக சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வியாபாரம் சூடுபிடிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்ததால், சாலையோரத்தில் கடைகள் அமைக்க முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டார்கள். மழைக்கு நனையாமல் இருக்க பலர் குடைகளை பிடித்தவாறு நடந்து சென்றார்கள். குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மழையில் நனையாமல் இருக்க ஜவுளி வாங்கிய பையை தலையில் வைத்து கொண்டு சென்றவர்களையும் காணமுடிந்தது.