தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை நடுவே ஆபத்தான பள்ளம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதி நாச்சியார் கோவில் கடைவீதியில் உள்ள சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தான் தினமும் திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைபூண்டி, வேதாரண்யம், நன்னிலம் பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றனர். இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலத்தில் பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்தில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-ஞானசேகரன், நாச்சியார்கோவில்.
குண்டும், குழியுமான சாலை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த பாச்சூர் பகுதியில் அய்யம்பட்டியில் இருந்து கீராத்தூர் செல்கின்ற சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி விவசாய பகுதிகளுக்கு டிராக்டர் மற்றும் அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் அடிக்கடி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-புண்ணியமூர்த்தி, பாச்சூர்.
வேகத்தடையில் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டது
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறையில் தஞ்சை-கும்பகோணம் சாலை உள்ளது. இந்த சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளைக்கோடுகள் வரையப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டன. எனவே, பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார்பெட்டிக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
-பொதுமக்கள், திருப்பாலைத்துறை.
குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை அருகே விளார் சாலையில் நாவலர் நகர் 2-ம் தெரு உள்ளது. இங்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் பன்றிகள், கால்நடைகள் இரை தேடி கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி நாவலர் நகர் 2-ம் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்
-செல்விபெருமாள், தஞ்சாவூர்.
தெருவிளக்குகள் ஒளிருமா?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த திருவோணம் பகுதியில் அக்கரைவட்டம் பகுதியில் சுடுகாடு பிரிவு சாலை மற்றும் நான்கு சாலை இணையும் இடத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படுள்ளன. இந்த நிலையில் விளக்குகள் பராமரிப்பின்றி சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள மின் வயர்களில் இருந்து அடிக்கடி தீப்பொறிகள் வெளிவருகின்றன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், அக்கரைவட்டம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதி செந்தலைவயல் கிராமத்தில் இருந்து இ.சி.ஆர் செல்லும் சாலை பராமரிபின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், சேதுபாவாசத்திரம்.