தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தரைக்கடைகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கரூர்
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கரூரில் தீபாவளி பண்டிகைக்கு துணிகள் மற்றும் பொருட்கள் வாங்க முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கரூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள ஜவகர் பஜார், கோவை ரோடு ஆகிய பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், இனிப்பகங்கள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க, கரூர் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் நேற்று வந்திருந்தனர்.
ஜவுளிக்கடைகளில் குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறல் மழையும் பெய்தது. இதனையும் பொருட்படுத்தாமல் நகரின் முக்கிய கடைவீதிகள் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கரூர் ஜவகர் பஜார், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடும்பம், குடும்பமாக கொரோனா அச்சம் இன்றி ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்க குவிந்தனர்.
மேலும் கரூர் ஜவகர் பஜார், திருவள்ளூவர் மைதானம் செல்லும் வழிகளில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிட்டத்தக்கது.