தீபாவளிக்கு பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

தீபாவளிக்கு பொருட்களை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-10-31 17:44 GMT
பெரம்பலூர்,
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 
இதனால் அந்தப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வந்தனர்.
ஜவுளிகடைகள்
ஆனால் கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் ஜவுளிகள் மற்றும் மற்ற பொருட்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென தற்காலிக இனிப்பு கடைகள், பட்டாசு கடைகள் ஆரம்பிக்கப்பட்டு விற்பனையை தொடங்கியுள்ளது. பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடைகளாக ஜவுளிகடைகள் புதியதாக ஏராளமானவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது.
மேலும் பல மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதால், பெற்றோர்கள் நேற்று தங்களது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை கடைவீதிக்கு வந்து வாங்கி சென்றனர். ஆனாலும் கொரோனா அச்சுறுத்தலையும் கண்டுகொள்ளாமல் பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் தான் கடைவீதிகளுக்கு வருகின்றனர். அவர்கள் தனி நபர் இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை.
வியாபாரம் பாதிப்பு
அரியலூர் மார்க்கெட் தெரு, எம்.பி.கோயில் தெரு, சின்ன கடைத்தெரு, பெரிய கடைத்தெரு, செந்துறை ரோடு ஆகிய பகுதிகளில் குடைபிடித்தபடி மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள வாரச்சந்தையில் ஆடு வியாபாரம் மழையால் குறைவாகவே நடந்தது. விடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தரைக்கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று முழுவதும் கனமழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஜவுளி மற்றும் மளிகை கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார் சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மனகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

மேலும் செய்திகள்