விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் தொழில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் முடங்கி வருகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் முடங்கி வருகிறது.
குடிசைத்தொழில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய இரும்பு உபகர ணங்கள், அரிவாள் தயாரிப்பு ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, வண்ணாங்குண்டு, தினைக்குளம் உள்ளிட்ட விவசாயப்பணிகள் நடைபெறும் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது.
இரும்பு பட்டையை உலையில் காயவைத்து இரும்பை சம்மட்டியால் அடித்து தயாரிக்கப்படும் அரிவாள், கதிர்அரிவாள், களைக்கொத்து, கோடரி, மண்வெட்டி கடப்பாறை, உளி, சுத்தியல் போன்ற விவசாயத்திற்கு பயன்படும் பொருட்கள் இந்த பட்டறைகளில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிலை நம்பி பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பட்டதாரி இளைஞர்கள்கூட பரம்பரை தொழிலான விசாயத்திற்கு தேவயைான உபகரணம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
உத்தரவு
தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பழிக்குப்பழியாக கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் கத்தி, வாள், வீச்சரிவாள் போன்றவற்றின் தயாரிப்பு கண்காணிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற ஆயுதங்கள் ரவுடிகள் கைகளுக்கு செல்வதையும் கட்டுப்படுத்த வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அரிவாள் தயாரிக்கும் பட்டறைகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.குறிப்பாக அரிவாள் போன்ற ஆயுதங்களை வாங்க வருபவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், எந்த காரணத்துக்காக வாங்குகிறார் என்ற விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
கண்காணிப்பு
இதேபோல் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் அல்லாத மற்ற காரணங்களுக்காக கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. கடை மற்றும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுடன் கூடிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
போலீசார் கூறும் கட்டுப்பாடுகள் குடிசைத் தொழிலாக நடக்கும் பட்டறைகளில் நடைமுறைப்படுத்த முடியாது என இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
கோரிக்கை
மேலும் போலீஸ் கெடுபிடியால் அரிவாள் தயாரிப்பு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அரிவாள் தயாரிப்பு மிகவும் குறைந்துள்ளது. பட்டறை தொழில் செய்பவர்களுக்கு மாற்று தொழில் அல்லது ஒரு நல வாரியம் அமைத்து அதன் மூலம் அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.