ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ 65 ஆயிரம் மோசடி
ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ 65 ஆயிரம் மோசடி
கோவை
ஓய்வு பெற்ற பேராசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் மோசடி செய்ததாக அந்த வீட்டில் வேலை பார்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓய்வு பெற்ற பேராசிரியை
கோவையை அடுத்த இடிகரை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 65). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. இவருடைய வங்கி கணக்கில் இருந்து கடந்த 22.9.21 முதல் 25.10.21 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு தவணைகளாக ரூ.65 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சுலோச்சனா கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்சுலோச்சனா வீட்டில் வேலை செய்து வரும் வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
செயலி பதிவிறக்கம்
உடனே அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இமாம்தீன் (20) என்பது தெரியவந்தது. பணமோசடி குறித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இமாம்தீன், சுலோச்சனாவுக்கு தெரியாமல் அவருடைய செல்போனை எடுத்து, அதில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் செயலியை பதிவிறக்கம் செய்தார்.
அதில் அவர், சுலோச்சனாவின் வங்கி கணக்கு விவரத்தை பதிவு செய்து அவருக்கு தெரியாமலேயே ஒரு மாதத்தில் மட்டும் பல தடவையாக ரூ.65 ஆயிரத்தை தனது நண்பர்களின் வங்கிக் கணக்குக்கு ஆன் லைன் மூலம் அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து போலீசார் இமாம்தீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.