சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.
விழுப்புரம்,
கருத்தரங்கம்
மக்கள் கண்காணிப்பகம்- இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் கண்ணகி, முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பொது உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு வக்கீல் ஹென்றிதிபேன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அப்துல்சமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பேராசிரியர் கல்விமணி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய ரமேஷ்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பூங்குழலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் நிறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவல்
தலித் மக்களை மற்ற சமூகத்தினருக்கு எதிரானவர்களாக காட்டி அரசியல் ஆதாயம் பெற ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. தமிழக கிராமங்களில் சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவியுள்ளனர். கோவில்களுக்கு நன்கொடை கொடுப்பது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி செய்வதுபோல் ஊடுருவி செயல்பட்டு வருகிறார்கள். பாம்பின் வாயில் தவளை சிக்கியிருப்பதைப்போல பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. சிக்கியுள்ளது. அ.தி.மு.க.வை அழிப்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள் நடக்கவில்லை, சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என சட்டமன்றத்தில் கூறியவர்தான் அப்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் சாதியின் பெயரால் மாணவர்கள், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இளைய தலைமுறையினர் நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது.
ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம்
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்துள்ளது. திருமாவளவனை வீழ்த்தினால் தலித் மக்களை வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் திருமாவளவனை வீழ்த்த முடியாது. தம்பி எனக்கூறி கையை பிடித்தபோது நம்பி கையை கொடுத்தேன், ஆனால் அதற்கு பின்னால் அவ்வளவு பெரிய படுகுழி இருக்கும் என நினைக்கவில்லை. சாதிய ஆணவப்படுகொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.