கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-31 16:40 GMT
கடலூர்,

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். 

ஆனால் தொடர் மழையால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் வெடிகள் வெடிக்க சில நிபந்தனைகள் மற்றும் தடைகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சரவெடிக்கு தடை

அதன்படி, பண்டிகை, கொண்டாட்டம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இதனால் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பிற அப்பாவி குடிமக்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான உரிமையை மீறுவதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது. பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்துவதும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது.

நேரம் ஒதுக்கீடு

சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். 
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் அடிப்படையில் கடந்த ஆண்டுகளை போலவே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்கலாம்.

பாதுகாப்பான சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் நமது அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியது பொதுமக்களாகிய நம் அனைவரின் கடமையாகும். 
ஆகவே அரசின் உத்தரவுகளை கடைபிடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்