திருப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

திருப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசு, பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-10-31 16:39 GMT
திருப்பூர்,
திருப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசு, பொருட்கள்  வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 
தீபாவளி பண்டிகை 
தீபாவளி பண்டிகை என்றாலே முக்கிய பங்கு வகிப்பது புத்தாடைகள் ஆகும். பண்டிகையின் போது பலரும் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆடைகளை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பலரும் தங்களுக்கு பிடித்த வகையில் தேர்ந்தெடுப்பார்கள். 
இந்நிலையில் தொழிலாளர்கள் நகரம் என்றழைக்கப்படும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.   விடுமுறை தினமான நேற்று புத்தாடைகள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பலரும் கடை வீதிகளுக்கு வந்தனர். இதனால் திருப்பூரில் தீபாவளி பண்டிகைகளை கட்டியது. 
ஆடை விற்பனை மும்முரம் 
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காதர்பேட்டை பகுதியில் தற்காலிக கடைகளை பலரும் அமைத்திருந்தனர். இந்த தற்காலிக கடைகளில் டி-சர்ட், பேண்ட், ஷார்ட்ஸ், சட்டை, பனியன், ஜட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வியாபாரிகள் பலரும் விற்பனை செய்தனர். இதில் தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் பலரும் வாங்கி சென்றனர். 
புத்தாடைகள் வாங்க வந்த பலரும் தங்களது இருசக்கர வாகனங்களை அந்த பகுதிகளிலேயே நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோல் காதர்பேட்டையில் உள்ள சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகளிலும் ஆடை விற்பனை மும்முரமாக நடந்தது. வடமாநிலத்தினர், தமிழகத்தினர் என பலரும் ஆடைகளை வாங்கி சென்றனர். 
கூட்டம் அலைமோதியது 
இதுபோல் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள புதுமார்க்கெட் வீதியிலும் பலர் புத்தாடைகள் வாங்க குவிந்தனர். அந்த பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் ஆடை விற்பனை,பட்டாசு விற்பனை விறு, விறுப்பாக நடந்தது. இதுபோல் புதுமார்க்கெட் வீதியில் வாட்சுகள், கண்ணாடிகள், கவரிங் கம்மல், வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. 
இதனையும் வாங்க பலர் குவிந்தனர். மேலும், போனஸ் பெற்ற தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்கூட்டம் அலைமோதியது.   திருப்பூரின் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பலரும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 
திருப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசு, பொருட்கள்  வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 
இதனால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலின் காரணமாக டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது. பார்க் ரோட்டில் இருந்து குமரன் ரோட்டிற்கு வருகிற இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. 4 சக்கர வாகனங்கள் ரெயில் நிலையம் வழியாக சுற்றி வரும்படி அறிவுறுத்தப்பட்டன. மேலும், போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் மாநகரில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
நெரிசல் ஏற்படுகிற பகுதிகளில் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர். இதுபோல் புதுமார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். திருப்பூரில் தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது. 

மேலும் செய்திகள்