தேவாரம் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை
தேவாரம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது58). இவர் விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் இனாம் கேட்டதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 29-ந்தேதி இன்ஸ்பெக்டர் வசித்து வந்த வீட்டில் சோதனை செய்தனர். இதில் பணம் மற்றும் பட்டாசு பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் சோதனை
இந்தநிலையில் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் போலீசார், இன்ஸ்பெக்டர் கருப்பசாமியின் சொந்த ஊரான தே.மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று காலை 7.20 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தே. மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டி முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த அவரது மனைவி ராணி மற்றும் 2 மகள்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். இந்த சோதனையின் போது, வீட்டின் நுழைவு வாயில் பூட்டப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் சோதனையை முடித்துக்கொண்டு மாலை 5.20 மணிக்கு வெளியே வந்தனர். சுமார் 10 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், நகை, பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.