தூத்துக்குடி மாவட்டத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு இன்று பள்ளிக்கூடத்துக்கு வரும் 2 லட்சம் மாணவர்களை வரவேற்க பள்ளி ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு இன்று பள்ளிக்கூடத்துக்கு வரும் 2 லட்சம் மாணவர்களை வரவேற்க பள்ளி ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடத்துக்கு வரும் 2 லட்சம் மாணவர்களை வரவேற்க பள்ளி ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிக்கூட வகுப்புகள் தொடங்க உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1221 தொடக்கப்பள்ளிக்கூடங்கள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1854 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூட வளாகங்கள் தூய்மையாக வைக்கவும், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் மழைநீர் தேங்காத வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மாணவர்கள்
மாவட்டத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 89 ஆயிரத்து 362 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 638 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர்.
பின்னர் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்கள் படிப்பை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உள்ளனர்.
வரவேற்பு
இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் சந்தோசமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதால், ஒரு வாரத்துக்கு பாடங்கள் நடத்தக்கூடாது. மாணவர்களுக்கு அதற்கு மாறாக ஆடல் பாடல், பாட்டு போட்டி, கதை கூறுதல் போன்ற கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி உள்ளார். அதன்படி பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள், சால்வைகள் அணிவித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.