இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி
இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி
கோத்தகிரி
கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் தீனட்டி கிராமத்தில் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரவீனா வரவேற்றார்.
ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ராஜா கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தில் உயிரி உரங்களின் அவசியம் குறித்து விளக்கினார். வட்டார தோட்டக்கலை அலுவலர் சந்திரன், இயற்கை வேளாண்மையில் பசுந்தாள் உரங்களின் பங்கு மற்றும் போர்டாக்ஸ் கலவையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியில் முன்னோடி விவசாயி கணேசன் கலந்து கொண்டு இயற்கை இடுபொருளான 3ஜி கரைசல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்ததுடன், அதை தயாரிக்கும் முறையை விளக்கினார்.
பின்னர் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், பஞ்சகாவியா, தசகவியா ஆகிய இடுபொருட்களின் பயன்பாட்டு முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.