கடைவீதியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

கோத்தகிரியில் தீபாவளியையொட்டி கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

Update: 2021-10-31 12:35 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் தீபாவளியையொட்டி கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

நகரில் குவிந்த மக்கள்

நாடு முழுவதும் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆடைகள், அணிகலன்கள், உணவு பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் வாகனங்கள் மூலம் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். 

இதனால் கோத்தகிரி நகரில் மக்கள் நெருக்கடி மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோத்தகிரி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

போக்குவரத்துக்கு தடை

வழக்கமாக விழாக்காலங்களில் கோத்தகிரி மார்க்கெட்டில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் உத்தரவின்பேரில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு, தற்காலிகமாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

அந்த சாலை வழியாக இயக்கப்படும் வாகனங்களை தாசில்தார் அலுவலக சாலை அல்லது பஸ் நிலையம் வழியாக செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இதேபோன்று ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

மேலும் செய்திகள்