நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
5-வது முறையாக அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றது. முறையாக பராமரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
5-வது முறையாக அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றது. முறையாக
பராமரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5-வது முறை
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் சரிவர பஸ் வசதி கிடையாது. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் அரசு பஸ்களும் சில நேரங்களில் நடுவழியில் பழுதாகி நின்று விடுகின்றன. இதனால் ஜீப்புகள், ஆட்டோக்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 13-ந் தேதி ஊட்டியில் இருந்து மசினகுடி வழியாக ஆனைக்கட்டிக்கு சென்ற பஸ் திடீரென பஞ்சராகி மசினகுடி பஜாரில் நின்றது. இதேபோன்று ஆரோட்டுப்பாறை, தேவன்-1, மண்வயல் ஆகிய இடங்களுக்கு சென்ற பஸ்களும் நடுவழியில் பழுதாகி நின்றன. தற்போது 5-வது முறையாக மாயாருக்கு சென்ற பஸ்சும் பழுதாகி நின்றது.
முறையாக பராமரிக்கப்படுமா?
அதாவது ஊட்டியில் இருந்து மசினகுடி வழியாக மாயாருக்கு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று காலை 6.30 மணியளவில் மாயாரில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது திடீரென நடுவழியில் பஞ்சராகி நின்றது. காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.
பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பஞ்சரான டயரை கழற்றிவிட்டு மாற்று டயரை பொருத்தினர். அதன்பிறகு அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் பஸ்களையாவது முறையாக பராமரிக்க இயக்கப்படுமா? என்பது கூடலூர் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.