பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிண்டியில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-10-31 04:42 GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் வீரபாண்டியன், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்பட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.அப்போது விலை உயர்வை கண்டித்து காலி கியாஸ் சிலிண்டரை வைத்தும், தொண்டர்கள் நெற்றி மற்றும் உடலில் நாமம் அணிந்தபடி கையில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுப்பதுபோன்றும், வெறும் கோவணத்துடன் தூக்கு கயிறில் தொங்குவது போன்றும் வேடமணிந்து பங்கேற்று, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர வாய்ப்புள்ளது. விமானத்துக்கு பயன்படுத்தும் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் லிட்டர் ரூ.100-க்கும் தாண்டி விற்பது பகல் கொள்ளை. விலை உயர்வால் தனியார் மட்டுமில்லை அரசாங்கமும் பாதிக்கிறது. தமிழ்நாடு அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதிக்கிறது. விலை உயர்வு காரணமாக கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்