சென்னம்பட்டி சனிச்சந்தையில் செயல்படாத ஏ.டி.எம். மையம்; பொதுமக்கள் அவதி

சென்னம்பட்டி சனிச்சந்தையில் செயல்படாத ஏ.டி.எம். மையத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2021-10-30 20:50 GMT
அம்மாபேட்டை
சென்னம்பட்டி சனிச்சந்தையில் செயல்படாத ஏ.டி.எம். மையத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
பல்வேறு அரசு அலுவலகங்கள்
அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் சனிச்சந்தை. இந்த கிராமத்தில் தான் சென்னம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், டெலிபோன் அலுவலகம், கால்நடை மருந்தகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும் வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யவும் சென்னம்பட்டி, ஜர்த்தல், முரளி, கொமராயனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சனிசந்தைக்குதான் வரவேண்டும். 
செயல்படாத ஏ.டி.எம். மையம்
இங்கு பொதுமக்களின் வசதிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் பொதுமக்கள் எளிதில் பணம் பெறும் வகையில் ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது இந்த ஏ.டி.எம். மையம் செயல்படவில்லை. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இங்குள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிக்கு அதிகம் பொதுமக்கள் வருவதால் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் வங்கியில் பண பரிவர்த்தனை உள்பட அனைத்து சேவைகளுக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். 
செயல்பாட்டுக்கு...
ஆனால் வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம். மையம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. இந்த ஏ.டி.எம். மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே ஏ.டி.எம். மையத்தை பொதுமக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஏ.டி.எம். மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்