அரியலூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை

அரியலூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-30 19:57 GMT
அரியலூர்:

தரையில் அமரும் பயணிகள்
அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களும், கிராமப்புறங்களுக்கு மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரியலூர் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம். ஏற்கனவே அரியலூர் பஸ் நிலையத்தில் மையத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால், அந்த கட்டிடம் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது.
பயணிகள் நிழற்குடைக்கு புதிய கட்டிடம் இன்னும் கட்டப்படவில்லை. தற்போது அதன் அருகே தற்காலிகமாக பயணிகள் நிழற்குடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதிகள் போதிய அளவு இல்லை. மேலும் அங்குள்ள இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் தரையில் அமரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீர் வசதி
மேலும் குடிநீர் வசதியும் அரியலூர் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இல்லை. இதனால் பயணிகள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சில கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை சுற்றி குப்பைகள் காணப்படுகிறது. கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் தூய்மையாக இல்லை. இலவச கழிவறை இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கப்படுகிறது. மற்றொரு நகராட்சி நவீன கட்டண கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன கட்டண காப்பகத்திற்கு மேற்கூரை இல்லாததால் அதில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மழையில் நனைகின்றன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் அந்த பஸ் நிலையத்தை சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர், வெளியூர் செல்வதற்கு பயணிகள் அதிகளவில் அரியலூர் பஸ் நிலையத்திற்கு வருவார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பயணிகளுக்கு தண்ணீர், கழிவறை, இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்