பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு

பள்ளி வாகனங்களில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-30 18:16 GMT
ராணிப்பேட்டை

பள்ளி வாகனங்களில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. தற்போது குறைந்து வரும் நோய்த்தொற்றின் காரணமாக படிப்படியாக பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. 

பள்ளிகள் இயங்காத 1½ வருட காலத்தில் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பஸ்களின் பாதுகாப்பு உறுதி திறன் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 300 பஸ்களும், அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 150 பஸ்களும் என 450 பஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

செல்போன் எண்கள்

நேற்று ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பிரேக், என்ஜின் செயல்பாடுகள், இருக்கை, பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த கலெக்டர் வாகனங்களில் பள்ளி பெயர்கள், பள்ளியின் செல்போன் எண், பள்ளி பஸ் கண்காணிப்பு அலுவலரின் செல்போன் எண்கள் பொறிக்கப்பட வேண்டும். 

டிரைவர் இருக்கை தனியாகப் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். பஸ்ஸின் தரைதளம் உறுதியாக இருக்க வேண்டும். பஸ்ஸின் ஜன்னல்கள் ஓரத்தில் தடுப்புகள், பஸ்சின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் தீயணைப்பு கருவி இருத்தல் வேண்டும்.

வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.
இவை அனைத்தும் ஒவ்வொரு பஸ்ஸிலும் சரியாக இருப்பதை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

சிறிய குறைபாடு இருந்தாலும் அனுமதி வழங்கக்கூடாது. அதை சரி செய்த பின்புதான் அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஒரு சிறிய பிரச்சினையும் இருக்கக் கூடாது. எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

எச்சரிக்கை

மேலும் பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர் மற்றும் நடத்துனர்களிடம், பஸ்சை இயக்கும்போது செல்போன் பேசக்கூடாது. வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். 

விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வந்து செல்வதை டிரைவர்கள், நடத்துனர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்கோட்டுவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்