திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-10-30 18:04 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

 1,075 இடங்களில் தடுப்பூசி முகாம் 

தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து 6 வாரங்களாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 739 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் நேற்று 7-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 1,075 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. கண்காணிப்பு குழு அலுவலர்கள் முகாம் வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தடுப்பூசி போடும் பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியாற்றினர். 

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த பட்டியல் அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை முகாமிற்கு அழைத்து வந்தனர்.

 78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 1,075 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் 78 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்