15 உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை
இருப்புகளை சரியாக பராமரிக்காத 15 உர விற்பனை நிலையங்கள் மீது வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் ரமணன் தலைமையில் துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள் அடங்கிய 13 குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் 13 வட்டாரங்களில் உள்ள 26 கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 75 தனியார் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரங்கள் இருப்பு, புத்தக இருப்பு, உண்மை இருப்பு, விற்பனை முனைய கருவி இருப்பு ஆகியவை சரிபார்க்கப்பட்டது. ஆய்வின் முடிவில் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இருப்பு சரியாக பராமரிக்காத 10 உர விற்பனை நிலையங்களுக்கு 7 நாட்கள் விற்பனை தடை உத்தரவும், விலைப்பட்டியல், பெயர் பலகை, இருப்பு விவரம் ஆகியவற்றை சரியாக பராமரிக்காத கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் 2 தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு விளக்கம் கேட்டும், உர இருப்புகளை சரியாக பராமரிக்காமல் இருந்த 3 தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 7 நாட்களுக்கு விற்பனை உரிமத்தை தற்காலிகமாக முடக்கம் செய்தும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
எனவே உர விற்பனையாளர்கள் அனைவரும் இருப்பினை ஒழுங்காக பராமரித்து அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், யூரியா மற்றும் டி.ஏ.பி. உரத்துடன் வேறு எந்த பொருளையும் இணைத்து விவசாயிகள் விருப்பமின்றி விற்பனை செய்யக்கூடாது என்றும், உர பதுக்கல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வரப்பெற்றால் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை துறை இணை இயக்குனர் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.