லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தேனியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தமபாளையம்:
தேனியில் இருந்து கேரள மாநிலத்துக்கு உத்தமபாளையம் வழியாக லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக, உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீசார், உத்தமபாளையம் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்றை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 200 மூட்டைகளில் 10 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். லாரியில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 டன் ரேஷன் அரிசியுடன் லாரி சிக்கிய சம்பவம் உத்தமபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.