அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
போடி அருகே மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கினர்.
போடி:
போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வேகமாக சாலையை கடந்து சென்றனர். இதனைக்கண்ட அங்கிருந்த சிலர், அவர்களை மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் தப்பி ஓடிய 2 வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிலமலை கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போடியில் இருந்து தேவாரம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
அந்த பஸ்சை, புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த திருப்பதி ஓட்டி வந்தார். அவர், கிராம மக்களை கலைந்து போக சொன்னார். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் திருப்பதியை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பஸ்சை அவர் சாலையிலேயே நிறுத்தி விட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போடி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.