திருப்பூர் குமரன் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை வைத்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருப்பூர் குமரன் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை வைத்தும் போக்குவரத்து நெரிசல்

Update: 2021-10-30 17:26 GMT
திருப்பூர், 
திருப்பூர் குமரன் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை வைத்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குமரன் ரோடு
திருப்பூர் குமரன் ரோட்டில் பிரபல ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஆண்களுக்கான பிரத்யேக ஆடையகங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூம்கள் அதிக அளவில் உள்ளன. அவினாசி ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் குமரன் ரோடு வழியாகவே கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதன்காரணமாக மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு உள்ளது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் தீபாவளி பண்டிகைக்கான ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி விட்டு செல்வதாலும், ரோட்டை கடப்பதாலும் போக்குவரத்து தடைபடுகிறது. இதன் காரணமாக குமரன் ரோடு பண்டிகை காலங்களில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குமரன் ரோட்டில் போக்குவரத்து அதிகம் காணப்பட்டது.
வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
பாதசாரிகள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்தவும் சாலையோரம் இருபுறமும் இரும்பு தடுப்புகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. இருப்பினும் இரும்பு தடுப்புகள் முழுமையாக அமைக்கப்படாததால் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைப்பது தொடர்கிறது.
இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் குமரன் ரோட்டில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் தங்கள் கைவரிசையை காட்டும் வாய்ப்பு உள்ளதால் சந்தேக நபர்கள் குறித்து போலீசில் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதுபோல் போக்குவரத்துக்கு இடையூறாக குமரன் ரோட்டில் வாகனங்களை நிறுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இருப்பினும் குமரன் ரோட்டில் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.
மாற்றுப்பாதை
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களே இருப்பதாலும் கடை வீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகரிக்கும். அதனால் குமரன் ரோட்டில் வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில் மாற்றுப்பாதை வழியாக வாகனங்களை இயக்குவதற்கு போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்