ஜீப் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

கம்பம்மெட்டு மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-10-30 17:22 GMT
கம்பம்:

சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 46). ஜீப் டிரைவர். இவர், உப்புக்கோட்டை அருகே உள்ள மாணிக்காபுரத்தை சேர்ந்த பெண் தோட்ட தொழிலாளர்களை தனது ஜீப்பில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

அதன்படி நேற்று காலை இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆமையாறு பகுதியில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் பணிகளை முடித்துவிட்டு மாலையில் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் வீடு திரும்பினர். அந்த ஜீப்பை சென்றாயன் ஓட்டினார். 

கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியில் ஜீப் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இடிபாடுக்குள் சிக்கி டிரைவர் சென்றாயன் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் மஞ்சம்மாள் (55), காளியம்மாள் (40), சுப்புலட்சுமி (45), செல்வம்மாள் (50), மாணிக்கம் (60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

 அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 பேரும் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்