அரசு மேல்நிலைப்பள்ளியில் பரபரப்பு சக மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட 10 ம் வகுப்பு மாணவர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட 10 ம் வகுப்பு மாணவர் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-30 17:09 GMT
நல்லம்பள்ளி:
தர்மபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்திலேயே சகமாணவியை திடீரென கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இந்த காட்சியை, அங்கிருந்த மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி தர்மபுரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவி மற்றும் பெற்றோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த மாணவனையும், மாணவியையும் கடுமையாக எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்தும், அரசு பள்ளிக்குள் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வந்தது குறித்தும் ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
 இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாணவர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. மாணவ-மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இனி இதுபோன்ற செயல்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர். 
 பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே மாணவ-மாணவிகள் காதல் வலையில் சிக்கிக்கொள்வதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க பள்ளி அளவில் கண்காணிப்பு குழு அமைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்