பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் பேரணி சென்றனர்.

Update: 2021-10-30 16:48 GMT
கடலூர், 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், சமையல் கியாஸ் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 30-ந் தேதி (அதாவது நேற்று) சைக்கிள் பேரணி நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி கடலூரில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இதற்கு வட்ட செயலாளர் (பொறுப்பு) சுந்தர் ராஜா தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன், வட்டக்குழு நாகராஜ், பாக்கியம், அமாவாசை, வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினர் குளோப் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதனை தொடர்ந்து ஜவான் பவன் அருகில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணியானது மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சென்றது.

பேரணியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பை சைக்கிளில் வைத்து கொண்டும் பேரணியாக சென்றனர். இதில் ஜீவா நடைபாதை சங்க தலைவர் பாலு, ஏழுமலை, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு இளங்கோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் தமிழ்மணி, பொருளாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்

இதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட செயலாளர் எம்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பி.சசிக்குமார் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர்கள் பாண்டியன், தமிழரசன், செங்குட்டுவன், சுப்பிரமணியன், சகாயம், தன்ராசு, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி, பழைய போலீ்ஸ் நிலையம் வரை சைக்கிள் பேரணியை நடத்தினர்.

திட்டக்குடி

திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டி ஊர்வலமாக திட்டக்குடி தாலுகா அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பகுதி என்று நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக எடுத்து சென்றனர்.

அப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாக குழு சின்னதுரை,  ஒன்றிய குழு சுப்பிரமணியன், முருகையன், நிதிஉலகநாதன், நகர செயலாளர் சிவஞானம், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல் உள்பட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு  கட்சி சார்பில், சைக்கிள் பேரணி நடைபெற்றது. சிதம்பரம் வண்டிகேட் மெயின் ரோட்டில் இருந்து தொடங்கிய  பேரணிக்கு நகர செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.

 மாவட்ட நிர்வாகக்குழு வி.எம் சேகர், வட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வண்டிகேட்டில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியில் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு மத்திய அரசை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்