பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்டத்தில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சிவராஜ் தலைமையில், கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் இருந்து சைக்கிள் ஊர்வலமாக கட்சியினர் புறப்பட்டனர். ஊர்வலம் காந்தி சிலை பழைய பேட்டை வழியாக சென்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே முடிந்தது.
இந்த ஊர்வலத்தில் மத்திய அரசு நாள்தோறும் உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தியும், 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பர்கூர்
பர்கூரில், வாணியம்பாடி கூட்ரோடு பகுதியிலிருந்து பர்கூர் பஸ் நிலையம் வரை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கண்ணு தலைமையில் ஊர்வலமாக சென்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் ரஜினி, திருப்பதி, குணசேகரன், ஜீவானந்தம் உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராயக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த சைக்கிள் ஊர்வலத்தில் மாநில குழு உறுப்பினர் கெம்பன், வட்டார செயலாளர் தொட்டன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் தக்காளி மண்டி கூட்டு ரோட்டில் இருந்து ராயக்கோட்டை அண்ணா சிலை வரை ஊர்வலம் நடந்தது. கெலமங்கலத்தில் நடந்த பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கே.வி.நாகராஜ், துணை செயலாளர் குருராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.