குழந்தை திருமணத்தால் உடல், மன ரீதியாக பாதிப்பு-போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி தகவல்
குழந்தை திருமணத்தால் உடல், மன ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி தெரிவித்தார்.
தேன்கனிக்கோட்டை:
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பூப்பனூர் மலை கிராமத்தில் காவல்துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமை தாங்கி விழிப்புணர்வு கையேட்டை வழங்கினார். கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி லதா கண்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி பேசியதாவது:-
குழந்தை திருமணம் மலை கிராமங்களில் அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். குழந்தைகளும் இளம்வயது திருமணம் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
பாலியல் புகார்
குழந்தைகள், பெண்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதி லதா கண்ணன் பேசுகையில், இளம் வயதுடைய குழந்தைகள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்தால் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் கலைவாணி மற்றும் பூப்பனூர், காமகிரி, பெட்டமுகிலாளர் உள்பட பல்வேறு மலை கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.