உரம் விற்பனையின்போது இணைப்பு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் கடை உரிமம் ரத்து
உரம் விற்பனையின்போது இணைப்பு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
உர விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரபீ பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 2,422 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,768 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,002 மெட்ரிக் டன், காம்ப்பளக்ஸ் 4,810 மெட்ரிக் டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விற்பனை உரிமமின்றி உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று, கைரேகை பதிவு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும்.
உரிமம் ரத்து
உரங்களை இருப்பு வைத்து கொண்டு செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுத்த கூடாது. அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் பரப்பிற்கு ஏற்ற உரப்பரிந்துரையின் படியே விற்பனை மேற்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக உரமிடுதலை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல், விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் விவசாயிகள் வாங்கும் உர அளவிற்கு அதிகமாக, அவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அண்டைய மாநில விவசாயிகளுக்கு ஆதார் பெற்றுக்கொண்டு, எக்காரணத்தை கொண்டும் உரங்கள் வழங்கக்கூடாது.
இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உரக்கட்டுபாட்டு ஆணை 1985-ன் படியும், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ம் படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரவிற்பனையின் போது இணைப்பு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் கடையின் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.