திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிய தொடங்கியதால் திண்டுக்கல்லில் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-10-30 16:24 GMT
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிய தொடங்கியதால் திண்டுக்கல்லில் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பொருட்கள் 
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் கண்களை கவரும் புத்தாடைகளும், மகிழ்ச்சி பூக்களை தரும் பட்டாசுகளும் முக்கியமானவை. மேலும் இனிப்பு மற்றும் கார வகைகளை வீடுகளில் செய்வார்கள். அதற்கு தேவையான பொருட்களை ஒருசில நாட்களுக்கு முன்பே மக்கள் வாங்கி விடுவார்கள்.
அதோடு தீபாவளி பண்டிகைக்கு புதிதாக வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதையும் மக்கள் வழக்கமாக்கி கொண்டு உள்ளனர். இதற்கிடையே தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கின்றன. இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அலைமோதிய கூட்டம் 
திண்டுக்கல்லில் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் பொதுமக்களை ஈர்ப்பதற்கு தீபாவளி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மெயின்ரோடு, ரதவீதிகள், கடைவீதிகளில் ஏராளமான சாலையோர துணி கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலையோர கடைகளில் ரெடிமேடு ஆடைகளை கூவி, கூவி விற்றனர். இதனால் திண்டுக்கல் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு, கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதிலும் நேற்று ஏராளமான மக்கள் திண்டுக்கல் நகரில் குவிந்தனர். மேலும் ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி சாலையோர கடைகளிலும் ஆடைகளை பேரம்பேசி வாங்கினர். அதேபோல் தீபாவளி பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். இதனால் திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியது. மேலும் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்