சுகாதார சீர்கேடு
கூடலூர் தாலுகா அலுவலக பகுதியில் கருவூலம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு கருவூலம் அருகே கழிப்பறை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த தொட்டி நிறைந்து சாலையில் கழிவுநீர் வழிந்தோகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிப்பறை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், கூடலூர்.
நீரோடை தூர்வாரப்படுமா?
கோத்தகிரி அருகே உள்ள காக்காசோலை கிராமத்தை ஒட்டி செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து நீரோட்டம் தடைப்பட்டு காணப்படுகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இந்த நீரோடையை உடனடியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால், கோத்தகிரி.
கடும் துர்நாற்றம்
கோவை சாய்பாபா காலனி ஏ.கே. நகர் பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் தொல்லை காரணமாக குப்பைகள் சாலை வரை வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்குள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜசேகரன், சாய்பாபா காலனி.
நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்
திருப்பூர், பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் சில அரசு பஸ்கள் சுல்தான்பேட்டை நிறுத்தத்தில் நிற்பது இல்லை. மேலும் சில நேரங்களில் சிறிது தூரம் முன்பாக அல்லது தள்ளி போய் நிற்கிறது. இதனால் வயதானவர்கள் ஓடி சென்று பஸ் ஏற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.குமார், சுல்தான்பேட்டை.
கழிப்பிடம் திறக்கப்படுமா?
கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆண், பெண் கழிப்பிடங்கள் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக இந்த கழிப்பிடம் பூட்டி வைக்கபட்டு உள்ளதால், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அவசர நேரத்தில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
நடராஜ், கோத்தகிரி.
மாசுபடும் தண்ணீர்
சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை பி.ஏ.பி. வாய்காலில் பலர் தங்களின் லாரி, இருசக்கர வாகனங்களை கழுவுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் விவசாய நிலம் பாழ்படுகிறது. இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து கண்காணித்து உரிய நடவடிக்கை வேண்டும்.
கண்ணன், செஞ்சேரிமலை.
கால்வாயில் குப்பைகள்
ஊட்டி முள்ளிக்கொரை பகுதியில் பவானி கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பொதுமக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழைநீரில் குப்பைகள் விளைநிலங்கள், நீர் நிலைகளுக்கு அடித்து செல்லப்படும் நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க கால்வாயை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
சுரேஷ், முள்ளிக்கொரை, ஊட்டி.
போக்குவரத்து நெரிசல்
ஊட்டி எட்டின்ஸ் சாலையோரத்தில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும் பிற வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.
சத்யா, பாம்பேகேசில், ஊட்டி
கழிவுநீர் கால்வாய் வசதி
வீரகேரளம் அருகே அண்ணா நகர் ஹவுசிங் யூனிட்-2 பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் அங்கு கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
தேவசேனதி, வீரகேரளம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை லயன்ஸ் ஸ்டாப் அருகே பச்சாபாளையம் தோட்டம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
ரமேஷ்குமார், பச்சாபாளையம் தோட்டம்.
பூங்காவில் தேங்கிய மழைநீர்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சேரன்மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சிறுவர் பூங்காவில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. மேலும் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகின்றன. இதனால் இந்த பகுதி பொதுமக்களுக்கு டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே பூங்காவில் மழைநீர் தேங்கா வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், சேரன்மாநகர்.