166 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்
நீலகிரி மாவட்டத்தில் 166 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 166 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
தகுதி சான்றிதழ்
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக மே மாதம் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. இதையொட்டி தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆய்வு பணி
இந்தநிலையில் நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதனை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தனியார் பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி, முதலுதவி பெட்டிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள், குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம், மேற்கூரை, இருக்கைகள் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
166 வாகனங்கள்
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:-
நீலகிரியில் 286 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளது. இதில் 166 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. குழந்தை களின் பாதுகாப்பு கருதி வாகனங்களில் கேமராக்கள், பக்கவாட்டில் உள்ள கிரில் போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது. இதில் குறைகள் இருந்தால் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி சரி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மலைப்பாதையில் பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே இயக்க வேண்டும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக குழந்தைகளை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகுதி சான்றிதழ் பெறாத வாகனங்களை இயக்கினால் சிறைபிடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.