இணை ஆணையர் அலுவலகத்தை மாற்றியதை உடனே ரத்து செய்ய வேண்டும்
குன்னூரில் இருந்து ஈரோட்டுக்கு இணை ஆணையர் அலுவலகத்தை மாற்றியதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
குன்னூரில் இருந்து ஈரோட்டுக்கு இணை ஆணையர் அலுவலகத்தை மாற்றியதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பண பலன்கள்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கான சட்டங்கள் நீலகிரியில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்று தொழிலாளர் நல அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தொழிலாளர்களுக்கு உரிய பண பலன்கள் கிடைக்காத பட்சத்தில் நல ஆணையத்திடம் தொழிற்சங்கத்தினர் முறையிட்டு தீர்வு கண்டு வருகின்றனர். இதற்கு குன்னூரில் செயல்பட்டு வரும் இணை ஆணையர் அலுவலகம் உதவியாக இருந்தது.
வீண் செலவு
இந்த நிலையில் குன்னூரில் இருந்து இணை ஆணையர் அலுவலகம் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி தோட்ட தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இட மாற்றம் காரணமாக நீலகிரி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஈரோட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால் காலதாமதம் மற்றும் வீண் பயண செலவு ஏற்படும். எனவே இணை ஆணையர் அலுவலகம் குன்னூரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உடனடியாக ரத்து
இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஏற்கனவே குன்னூரில் உள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. அப்போது தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக இடமாற்ற நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்து உள்ளனர்.
இது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் நீலகிரி தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள். எனவே தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தை இடமாற்றம் செய்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.