குழந்தைகளை அச்சமின்றி பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்; அமைச்சர் கயல்விழி அறிவுரை
பெற்றோர்கள் மாணவர்களை எந்தவித அச்சமும் இல்லாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் கயல்விழி கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொளவெடு ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.69.98 லட்சம் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெ.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற 1-ந்தேதி முதல் ஆரம்பபள்ளிகள் திறக்கப்பட உள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. விருப்ப பட்டால் வரலாம். அப்படி பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர்தான் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
வகுப்பறைகளில் சமூக இடைவெளி கடைபிடித்து அமர வைக்கப்படும். ஆசிரியர்கள் 2 தடுப்பூசிகள் போட்டு இருக்க வேண்டும். இப்படி அனைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மாணவர்களை எந்தவித அச்சமும் இல்லாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கயல்விழி தெரிவித்தார். இதில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் என்.எஸ்.ராஜு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.