நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி
சென்னை சேத்துப்பட்டில், நண்பர்களுடன் விளையாடும்போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 வயது சிறுவன்
சென்னை சேத்துப்பட்டு, பச்சையப்பா கல்லூரி விடுதி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கமல்கிஷோர் (வயது 37). இவருக்கு 5 வயதில் ஹித்தேஜ் என்ற மகன் இருந்தான். கடந்த 20 ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வந்த கமல்கிஷோர், மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர், வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் தனித்தனி வீடுகளும், நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது. நேற்று முன்தினம் மாலை கமல்கிஷோரின் மகன் ஹித்தேஜ் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தனது நண்பர்களான மேலும் 3 சிறுவர்கள், பின்புறம் உள்ள நீச்சல் குளம் அருகில் சென்று விளையாடியதாக தெரிகிறது.
உயிரிழப்பு
ஆனால் அதன்பிறகு வெகுநேரமாகியும் ஹித்தேஜ் வீடு திரும்பவில்லை. விளையாட சென்ற மகன் இன்னும் வீடு திரும்பவில்லையே என அதிர்ச்சி அடைந்த கமல் கிஷோர், அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தேடினார்.
அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் உள்ள நீச்சல் குளத்தில் உடல் அசைவின்றி ஹித்தேஜ் தண்ணீரில் மிதப்பதை அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிலர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஹித்தேஜ் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போலீசார், பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுவன், தனது நண்பர்களுடன் விளையாடும் போது, நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும், சிறுவனின் இறப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.