விதவை சான்றிதழ் வழங்குவதற்கு பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தருக்கு 4 ஆண்டுகள் சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
விதவை சான்றிதழ் வழங்குவதற்கு பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சேலம்:
ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து விதவை சான்றிதழ் கேட்டு சுதா மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு எழுத்தராக பணியாற்றிய சீனிவாசன் (36) என்பவர் விதவை சான்றிதழ் வழங்க சுதாவிடம் லஞ்சம் கேட்டார்.
இதை கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி சுதாவிடம் இருந்து சீனிவாசன் ரூ.10 ஆயிரம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது, விதவை சான்றிதழ் வழங்க பெண்ணிடம் லஞ்சம் பெற்றதற்காக சீனிவாசனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரெய்கானா பர்வீன் தீர்ப்பு அளித்தார்.