குமரி மாணவி தற்கொலையில் காதலன் அதிரடி கைது
சமூகவலைத்தளத்தில் ஆபாச புகைப்படத்தை சித்தரித்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
களியக்காவிளை,:
சமூகவலைத்தளத்தில் ஆபாச புகைப்படத்தை சித்தரித்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளையை சேர்ந்தவர் பீனா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஆதிரா (வயது 19).
இவர் உறவினர் வீட்டில் தங்கியபடி பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆதிரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே சமயத்தில் கை நரம்பையும் அவர் அறுத்து கொண்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பளுகல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அந்த மாணவியின் செல்போன், மடிக்கணினியை போலீசார் கைப்பற்றினர். இதில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கின.
வாலிபர் மிரட்டியதால்...
அதாவது, திருச்சூரை சேர்ந்த வாலிபர், ஆதிராவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரவ விட்டதோடு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்தநிலையில் வெளிநாட்டில் உள்ள ஆதிராவின் தாயாருக்கும் அந்த வாலிபர் ஆபாச படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆதிரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் ஆதிரா சாவதற்கு முன்பு அந்த வாலிபரை தொடர்பு கொண்டு கைநரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்யப்போவதாக வீடியோ அனுப்பிய ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்தன.
பஞ்சாப் மாநிலத்தில் கைது
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவுபடி 2 தனிப்பிரிவு போலீசார் திருச்சூரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். இதில் அந்த வாலிபரின் பெயர் நிகில்குமார் (30) என்ற தகவல் வெளியானது. மேலும் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் சண்டிகருக்கு விரைந்து சென்று நிகில் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை குமரி மாவட்டம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் போலீசாரிடம், நிகில்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வாட்ஸ்-அப் காதல்
எனக்கும், ஆதிராவுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் எங்களுக்கிடையே காதலாக மாறியது. ஆதிராவை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்த நான், அவ்வப்போது பளுகலுக்கு வந்து அவரை சந்தித்தேன். அப்போது பல இடங்களுக்கு சென்று உல்லாச வானில் சிறகடித்து பறந்தோம். ஆதிராவுக்கு ஆசையாக நான் மடிக்கணினி வாங்கி கொடுத்தேன். அந்த வகையில் காதலுக்காக ரூ.85 ஆயிரம் வரை அவருக்கு செலவு செய்தேன்.
இந்தநிலையில் எனக்கு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பிரபல டீக்கடையில் வேலை கிடைத்தது. இதனால் நான் அங்கு சென்று விட்டேன். அங்கிருந்தபடி தொடர்ந்து ஆதிராவிடம் பேசி வந்தேன்.
வேறொருவருடன் தொடர்பு
ஆனால் அதன் பிறகு ஆதிராவின் செயலில் மாற்றம் ஏற்பட்டது. அதே சமயத்தில் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், என்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆதிராவை நான் காதலிக்கிறேன் என்றும், எனவே இனிமேல் ஆதிராவுடன் நீ பேசக்கூடாது என்றும் தெரிவித்தார். ஆனால் நான் இதை நம்பவில்லை.
உடனே அந்த வாலிபர், ஆதிராவுடன் பேசிய ஆடியோ மற்றும் வாலிபருடன் ஆதிரா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை என்னுடைய செல்போனுக்கு அனுப்பினார். இதனை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். எந்த அளவுக்கு ஆதிராவை நேசித்தேனோ, அந்த அளவுக்கு அவர் மீது, இந்த சம்பவத்திற்கு பிறகு வெறுப்பாக மாறியது.
பழிவாங்க திட்டமிட்டேன்
என்னை காதலித்து கொண்டே மற்றொரு வாலிபருடன் நெருக்கமாக இருந்துள்ளாரே என நினைத்த நான், ஒரு கட்டத்தில் ஆதிராவிடம் வாலிபர் கூறிய விஷயங்களை தெரிவித்தேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டேன். பின்னர் நான் ஆதிராவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரவ விட்டேன். மேலும் அவருக்கு தொடர்ந்து மிரட்டலும் விடுத்தேன். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக நிகில்குமார் மீது பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த வாலிபரையும் போலீசார் தேடிவருகின்றனர்.